Thursday, December 14, 2006

காதல் படுத்தும் பாடு.....

மங்கையடி நீ
பூ வைத்துச் செல்
என்பாள் அன்னை!
வேண்டாமென்று மறுத்துச்
செல்வேன் நான்...

பொறுமையாக சாப்பிடு
அவசரம் வேண்டாம்
என்பாள் அன்னை!
பொருட்படுத்தாமல் நின்றபடியே
சாப்பிட்டுச் செல்வேன் நான்...

விரல் நகங்களை கடிக்காதே
நகவெட்டியால் களைந்து எடு
என்பாள் அன்னை!
முடியாது என்று அவள்
எதிரிலேயே கடித்து எறிந்து
செல்வேன் நான்...

ஆனால் இன்றோ!

பூக்காரன் குரல் கேட்டாலே
வாசலுக்கு வந்து விடுகிறேன்
இது போதவில்லையென...
அதனை சூடிக்கொண்டு
கண்ணாடியில் அரைமணி நேரம்
அழகு பார்க்கிறேன்!

உட்கார்ந்து சாப்பிடுவதே
அதிசயம் அன்னைக்கு...
இதில் நானோ என்னையே
மறந்தவளாய்! சிரித்துக்
கொண்டேயல்லவா உணவருந்துகிறேன்!

இது மட்டுமா!
நகங்களை சீராக அழகுபடுத்தி
நகப்பூச்சு பூசும்போது அவைகள்
என்னை எள்ளி நகையாடுவதை
நான் மட்டுமே அறிவேன்!

ஏனடா!
காதல் செய்வதாய் கடிதம்
கொடுத்தவன் நீதானே!

ஆனால் மாற்றங்கள் என்னுள்
நிகழ்கிறதே?

இதைத்தான்...
காதல் படுத்தும் பாடு
என்றாயா நீ...

Friday, September 08, 2006

மாறாத நினைவுகள்

காதல் பிரசவம்

பெண்ணவள் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
எவரது கண்ணிலும் படாமல்
இருப்பதில்லை....

நான் சுமக்கும் கருவின்
வளர்ச்சி...
உன் கண்களுக்கு கூட
தெரியவில்லையா?

இல்லை! நிச்சயமாக இல்லை!

நீ என்னுள் காதல் கருவாக
வளர்வதை
முழுவதும் உணர்ந்தவள்....

கருவினுள் வளர்ந்து வரும்
குழந்தைக்கு....

பிடித்தது! பிடிக்காதது!

எதுவென அறிந்து உண்ணும்
அன்னையாய்...
நான் நடந்து கொண்டதை
ரசித்தவள் நீ....

கருவினுள் சுகமாய் இருப்பதை
என்றாவது ஒருநாள்....
காலால் உதைத்து உண்ர்த்தும்
குழந்தையைப் போல்...

நீ உதிர்க்கும் ஒரிரு
வார்த்தைக்ள்...
நீ காணும் இன்பத்தை
எனக்குணர்த்தும்....

பத்து திங்கள் கழிந்த பிறகும்....
வெளியுலகை சந்திக்க பயந்து....
கருவினிலேயே இருக்க விரும்பியதாம்
குழந்தை!

குழந்தையும் உன்னைப் போல்
அறியவில்லை!...

தக்க தருணத்தில் வெளி
வந்தால்தான்...
தனக்கும் தன்னைச் சுமப்பவளுக்கும்
நன்மையென....

தனக்குள் பாதுகாப்பாக சுமக்கும்
போதே!
அரவணைத்து, கருவின் உணர்வறிந்து
நடந்தவளுக்கு....
கைகளில் வந்ததும் அரவணைக்கும்
பக்குவம் தெரியுமடி....

என் காதல் கருவாய்
இருப்பவளே!

இதனை உணர்ந்து....

எப்பொழுது நீயும் எனக்குத் தருவாய்
பிரசவ வலி?