Thursday, December 14, 2006

காதல் படுத்தும் பாடு.....

மங்கையடி நீ
பூ வைத்துச் செல்
என்பாள் அன்னை!
வேண்டாமென்று மறுத்துச்
செல்வேன் நான்...

பொறுமையாக சாப்பிடு
அவசரம் வேண்டாம்
என்பாள் அன்னை!
பொருட்படுத்தாமல் நின்றபடியே
சாப்பிட்டுச் செல்வேன் நான்...

விரல் நகங்களை கடிக்காதே
நகவெட்டியால் களைந்து எடு
என்பாள் அன்னை!
முடியாது என்று அவள்
எதிரிலேயே கடித்து எறிந்து
செல்வேன் நான்...

ஆனால் இன்றோ!

பூக்காரன் குரல் கேட்டாலே
வாசலுக்கு வந்து விடுகிறேன்
இது போதவில்லையென...
அதனை சூடிக்கொண்டு
கண்ணாடியில் அரைமணி நேரம்
அழகு பார்க்கிறேன்!

உட்கார்ந்து சாப்பிடுவதே
அதிசயம் அன்னைக்கு...
இதில் நானோ என்னையே
மறந்தவளாய்! சிரித்துக்
கொண்டேயல்லவா உணவருந்துகிறேன்!

இது மட்டுமா!
நகங்களை சீராக அழகுபடுத்தி
நகப்பூச்சு பூசும்போது அவைகள்
என்னை எள்ளி நகையாடுவதை
நான் மட்டுமே அறிவேன்!

ஏனடா!
காதல் செய்வதாய் கடிதம்
கொடுத்தவன் நீதானே!

ஆனால் மாற்றங்கள் என்னுள்
நிகழ்கிறதே?

இதைத்தான்...
காதல் படுத்தும் பாடு
என்றாயா நீ...